இட ஒதுக்கீடு


‘நீரே தாகம் தணிக்கும்’ என்கிறான் ஒருவன். ‘இல்லை, பானியே தணிக்கும்’ என்கிறான் மற்றொருவன். ‘இல்லை, வாட்டரே தணிக்கும்’ என்கிறான் இன்னொருவன்.

மூவரும் அடித்துக்கொண்டு சாகிறார்கள், தாகம் தணியாமலே. இதுதான் மதவாதிகளின் கதை.

பொருள் ஒன்றுதான்; பெயர்தான் வேறு வேறு என்பதைப் புரிந்துகொள்ளாத அறியாமையே சண்டைக்குக் காரணம்.

இறைவனை அறியாதவனே இறைவன் பெயரால் சண்டையிடுகிறான். சண்டையிடுகிறவன் உண்மையான மதவாதியல்லன். அவன் வெறும் மதம் பிடித்தவன்.

வலையில் தண்ணீர் அகப்படாது. மதம் பிடித்தவனிடம் மகேசன் அகப்படமாட்டான்.

பறக்கும் போது சப்தமிடும் வண்டு பூவில் அமர்ந்து தேன் அருந்தும் போது மெளனமாகி விடுகிறது.

இறைவனை அடையாதவனே சர்ச்சைகள் செய்கிறான். அடைந்தவன் மெளனமாகி விடுகிறான்.

எல்லாப் பூவிலும் தேன் இருக்கிறது என்பதை அறிந்த தேனீ மலர்களுக்குள் பேதம் பாராட்டுவதில்லை. ஞானியும் மத பேதம் பாராட்டுவதில்லை.

ஒருவன் மந்திரை இடித்துவிட்டு மஸ்ஜித் கட்டுகிறான். மற்றொருவன் மஸ்ஜிதை இடித்து மந்திர் கட்டுகிறான்.

இவர்கள் கட்டடங்களையே வணங்குகிறார்கள். கடவுளை அல்ல.

இதயமே இறைவனின் மெய்யான ஆலயம்.

போலி மதவாதிகள் மெய்யாலயத்தை இடித்துவிட்டுப் பொய்யாலயத்தைக் கட்டுகிறார்கள்.

கடவுள் பக்தன் கடப்பாரை ஏந்தமாட்டான். பூக்களைத் தொடுக்கும் நாரையே ஏந்துவான்.

இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்பதை அறிந்தவன் அவனுக்கு இட ஒதுக்கீடு செய்வான?

எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதைப் பார்க்கத் தெரிந்தவன் பிற உயிர்களைப் பகைப்பானா?

கவிஞர் பர்ஃக் எப்பொழுதோ எழுதிய கவிதை இது:

நீ மறைந்திருப்பதால்தான்
    மஸ்ஜித் மந்திர் சண்டைகள்
நீ மட்டும் வெளிப்பட்டுவிட்டால்
    எல்லாமே நீயென்றாகிவிடும்

– அப்துல் ரகுமான்

Advertisements

கர்வ விருந்தாளி


இதயம் ஒரு வீடு.

நினைவுகள் அதில் வந்து போகும் விருந்தினர்கள்.

சில நினைவுகள் நாம் விரும்பி அழைக்கும் விருந்தாளிகள்.

சில நினைவுகளோ நாம் அழைக்காமலே நுழையும் விருந்தாளிகள்.

அழைக்காத விருந்தாளிகள் நம் இதயத்தில் நுழையாமல் தடுக்க நம்மால் முடிவதில்லை.

சில நினைவுகள் சில நாள் இருந்துவிட்டுப் போய்விடும்.

சில நினைவுகளோ பல நாட்கள் தங்கி இருக்கும்.

சில நினைவுகளோ விரட்டினாலும் போகாத விருந்தாளிகள்.

சில நேரங்களில் நம் இதயம் வீடுதானா? இல்லை சத்திரமா? என்ற சந்தேகம் வந்து விடுகிறது.

சில நினைவுகள் வந்த சுவடு தெரியாமல் போய்விடுகின்றன.

சில நினைவுகள் பூக்களைப் பரிசாகத் தந்துவிட்டுப் போகின்றன.

சில நினைவுகளோ ஆழமான காயத்தை ஏற்படுத்திவிட்டுப் போகின்றன.

காதலியின் நினைவு கொஞ்சம் வித்தியாசமானது.

அது விவஸ்தை கெட்ட விருந்தாளி.

அழைத்தால்தான் வரும் என்பதில்லை.

அதற்கு நேரம் காலமே கிடையாது. எப்போது வேண்டுமென்றாலும் வரும்.

அப்படி வரும் போது அது வெளியில் நின்று அழைப்பதில்லை. கதவையும் தட்டுவதில்லை.

இந்த நாகரீகம் எல்லாம் அதற்குக் கிடையாது.

அதன் பாட்டுக்கு உள்ளே நுழையும்.

அழைக்காமல் வருகிறோமே என்ற வெட்கமெல்லாம் அதற்கு இல்லை.

மாறாகக் கர்வத்தோடு நுழையும்.

அது இதயத்திற்கு வருவதே இதயத்திற்கு ஒரு பெறுமை என்று அதற்கு நினைப்பு.

கவிஞர் ஆர்ஸீவின் கவிதை இது.

அழைப்பதுமில்லை
கதவைத் தட்டுவதுமில்லை
அவள் நினைவு பெரிய கர்வத்தோடு
இதயத்தில் நுழைகிறது.

அப்துல் ரகுமான்

வாழ்க்கை போதை


மனிதன் ஆடுகிறான்; பாடுகிறான்; அழுகிறான்; சிரிக்கிறான் – ஒரு குடிகாரனைப் போல.

அப்படியென்றால் வாழ்க்கை என்பது ஒரு போதையா?

ஆம் என்கிறார் கவிஞர் ஃபீராக் அப்படித்தான் தோன்றுகிறது.

குடிப்பவன் முதலில் தடுமாறுகிறான். அதுதான் பிள்ளைப் பருவம்.

போகப் போக போதை தலைக்கேறுகிறது. அதுதான் வாலிபப் பருவம்.

பிறகு சோர்வு, மயக்கம், அதுதான் முதுமைப் பருவம்.

கடைசியில் உறங்கிவிடுகிறான். அதுதான் மரணம்!

குடிப்பவனை ஏன் குடிக்கிறாய்? என்று கேட்டால் ‘ஆனந்தத்திற்காக’ என்கிறான். வாழ்கின்றவனும் அப்படித்தான் சொல்கிறான்.

நம்மில் பெரும்பாலோருக்கு போதைப் பழக்கம் மாதிரி வாழ்க்கையும் ஒரு பழக்கம்.

மதுக் கிண்ணம் குடிகாரனை அழைப்பது போலவே வாழ்க்கையும் வசீகரமாக அழைக்கிறது.

அருந்த அருந்த அருந்தும் ஆசை அதிகமாகிறது. வாழ வாழ வாழும் ஆசை அதிகமாகிறது.

போதை ஏறியவன் தன்னை மறக்கிறான். வாழ்க்கையும் சுயத்தை மறைத்துச் சமூகத்திற்காக ஆடும் வேஷக் கூத்துத்தான்.

போதை ஏறியவனுக்கு அறிவு மயங்கிப் போகிறது. எது பாதை? எது சாக்கடை? என்று தெரியவில்லை. சாக்கடையில் போய் விழுகிறான்.

வாழ்க்கையும் அப்படித்தான் எதில் விழுகிறோம் என்பது தெரியாமலே எது எதிலோ விழுந்து விடுகிறார்கள்.

போதை யதார்த்தத்தின் மேல் அழகிய வர்ணங்களைப் பூசிக் காட்சியைக் கனவுமயமாக்கிவிடுகிறது. வாழ்க்கையும் அதைத்தான் செய்கிறது.

போதை ஒன்றை இரண்டாகக் காட்டுகிறது. வாழ்க்கையும் அப்படித்தான்.

உண்மைதான். வாழ்க்கை என்பதே மயங்குவதுதான்.

எந்த மதுவை அருந்தியதால்
வந்ததோ தெரியவில்லை
இந்த வாழ்க்கை
ஒரு போதை.

அப்துல் ரகுமான்

போனால் வராது


வில்லிலிருந்து புறப்பட்ட அம்பும் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தையும் திரும்பி வாரா என்பார்கள்.

வில்லிலிருந்து புறப்பட்டுப் போன அம்பைத் தேடிக் கண்டுபிடித்துவிட முடியும்.

ஒரு தவறான வார்த்தையைச் சொல்லி விடுகிறோம். அதனால் சிலருக்கு கோபம் உண்டாகிறது. அந்த வார்த்தையை நாம் திரும்பிப் பெற்றுக்கொள்வதாய்ச் சொன்னால் அவர்கள் கோபம் தணிந்து விடுகிறது.

போன வசந்தத்தில் பூத்து உதிர்ந்து போன பூக்களுக்காக நாம் புலம்ப வேண்டியதில்லை.

மீண்டும் வசந்தம் வரும். மீண்டும் பூக்கள் மலரும்.

கடலில் கலந்துவிட்ட நதி கூட மேகமாகி மழையாகி மீண்டும் ந்தியாகிக் திரும்பிக் கடலுக்கே வந்துவிடுகிறது.

பணத்தை இழந்தாலும் மீண்டும் சம்பாதித்துவிட முடியும். நம் வாழ்க்கையில் போனால் திரும்பி வராதது ஒன்று உண்டு.

அதுதான் காலம்.

‘போனால் வராது; பொழுது போனால் கிடைக்காது’ என்று தன் மட்டமான பொருள்கள் விற்பதற்காக நடைப்பாதை வியாபாரி கூவுகிறான்.

அவன் பொய் சொல்கிறான். ஆனால் அவன் அறியாமலே அந்தப் பொய்யில் எவ்வளவு பெரிய உண்மையைச் சொல்லுகிறான்!

ஆம் கடந்துவிட்ட பொழுது போனால் வராது; மீண்டும் கிடைக்காது.

காலம் தன் கையில் எடுத்துக்கொண்டு போய்விட்ட அந்த பிள்ளைமைப் பருவம், அதன் கவலையற்ற விளையாட்டுப் பொழுதுகள், காதல் போதை நிறைந்த அந்த இளமைக் காலம், அதன் கவிதைக் கணங்கள் இவையெல்லாம் திரும்ப வருமா?

மிர்ஸா காலிப் நண்பர்களிடம் விடைபெறுப் போது சொல்கிறார்:

நீங்கள் எப்போது விரும்பினாலும்
என்னை மீண்டும்
அழைத்துக் கொள்ளலாம்
நான் கடந்துவிட்ட
காலமல்ல
மீண்டும் வராமலிருக்க.

அப்துல் ரகுமான்

கண்ணீராக வந்தவள்


காதலி பிரிந்திருக்கும் இரவு விசித்திரமானது.

அவள் இல்லை என்றும் சொல்ல முடியாது. இருக்கிறாள் என்றும் சொல்ல முடியாது.

காதலி வரவில்லை. ஆனால் அவள் நினைவு வருகிறது.

அவள் நினைவாக வருகிறாள். அதனால் அவள் இல்லாத போதும் இருந்துகொண்டிருக்கிறாள்.

பிரிவின் துயரத்தால் கண்ணீர் ததும்புகிறது. அது கண்ணீர் அல்ல. அவள்தான்!

அவள்தான் கண்ணீராகத் ததும்புகிறாள்.

கண்ணீர் மனிதனின் சாரம்.

மகத்தான உணர்ச்சிகள் தோண்டும் போது அந்தரங்கத்தில் ஒளிந்திருக்கும் கண்ணீர் என்ற மர்ம நீர் வெளிப்படுகிறது.

காதல் தோன்றும் போது ஆணின் அந்தரங்கத்தில் ஒளிந்திருக்கும் பெண் என்ற மர்ம தேவதை வெளிப்படுகிறாள்.

கண்ணீர் போலவே அவளும் உன்னதமானவள்.

காதலி கண்ணீராக வருகை தரும் போது அந்த வருகை அவளுடைய நிஜ வருகையை விட மகத்தானதாகிவிடுகிறது.

காதலியே காதலனின் மூச்சாகவும் இருக்கிறாள். அவளால்தான் அவன் உயிர் வாழ்கிறான்.

மூச்சு என்றால் வருவதும் மட்டும் அல்லவே, போவதும்தானே?

எனவே அவளும் வருவதும் போவதுமாக இருந்தாள்.

கவிஞர் மஃதூம் கூறுகிறார்:-

இரவு முழுவதும் நீ
ஈர விழிகளில்
ததும்பிக் கொண்டிருந்தாய்
சுவாசத்தைப் போல்
வந்துகொண்டிருந்தாய்
போய்கொண்டிருந்தாய்.

அப்துல் ரகுமான்

கண்ணீரில் மூழ்கிய கதை


காதல் என்பது ஒரு தியாகம்.

காதலிப்பவர்கள் காதலுக்காகப் பலவற்றைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது.

ஆனால் இதை விடப் பெரிய தியாகம் ஒன்று உண்டு.

அது ஒரு பொது நலத்துக்காகக் காதலையே தியாகம் செய்வது.

காதலிப்பவர்களுக்கு இது மிகக் கடினமானது.

இன்பத்தை விட்டு விட்டுத் துன்பத்தை ஒருவன் துணையாக்கிக் கொள்வானா?

தன் காதலைத் தானே கொலை செய்ய முடியுமா?

எவனாவது தன் வீட்டைத் தானே இடிப்பானா?

எந்த விளக்கின் காதலால் விட்டில் மோகத்தொடு தேடி வந்து சுற்றுகிறதோ அந்த விளக்கை விட்டிலே அணைக்குமா?

தன்னையே ஒருவன் அந்நியமாக்கிக் கொள்வானா?

காதலைத் தியாகம் செய்பவர்கள் இப்படித்தான் செய்ய வேண்டியிருக்கிறது.

இந்த தியாகம் அதிசயமானது. அதனால் இந்தத் தியாகிகளைப் பார்த்து வியப்பால் காதலே மெளனமாகிவிடுகிறது.

இத்தகைய பைத்தியக்காரர்கள் ஒரு சிலராவது இருப்பதால்தான் இந்த உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய தியாகம் செய்யப் புறப்படும் ஒருவனைப் பற்றிய கஜல் கவிதை இது. ஃகமர் ஜலாலாபதி எழுதியது.

இதில் சிறந்த கண்ணியென்று ஏதாவது ஒன்றை என்னால் தேர்ந்தெடுக்க முடியவில்லை. ஏனென்றால் எல்லாக் கண்ணிகளும் அருமையாக இருக்கின்றன. எனவே முழுக் கவிதையும் தருகிறேன்.

உங்களுக்கு இன்னொரு வியப்பான செய்தி. இது திரைப் படத்திற்காக எழுதப்பட்ட கஜல்.

சோகத்தையே துணையாக்கிக்கொண்டு
அதோ, போகிறானே அவனைப் பாருங்கள்
தன் தோளில் தன் காதலின் பாடையைச்
சுமந்துகொண்டு போகிறான்.

தன் வீட்டைத் தானே அழிக்க
ஒரு பைத்தியக்காரன் போகிறான்
விளக்கை அணைப்பதற்கு
விட்டிலே போய்க் கொண்டிருக்கிறது

காதலிப்பவர்களே!
இந்தக் காட்சியையும் பாருங்கள்
கண்ணீரில் மூழ்கிய
கதை ஒன்று போய்க்கொண்டிருக்கிறது

காதல் ஊமையாகிவிட்டது
முறையீடு அழுகிறது
தனக்குத் தானே அந்நியமாக்கி
அவன் போய்க்கொண்டிருக்காறான்.

அப்துல் ரகுமான்

ஒரு நல்ல செய்தி!


அந்த ஊரில் ஒரு வழக்கம் உண்டு யாராவது ஒருவர் நல்ல செய்தியொன்றைச் சொன்னால் அதற்காக அவர்களுக்கு பணம் வசூலித்து அன்பளிப்பாக கொடுப்பார்கள்.

அந்த வழக்கம் ஒருவிதமான மூடநம்பிக்கை என்பது முல்லாவின் கருத்து. அந்த மக்களுக்குப் புத்தி கற்பிக்க வேண்டும் என்று முல்லா கருதினார்.

ஒருநாள் அவர் சந்தை கூடும் இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த ஓர் இடத்தில் நின்று கொண்டு ”அன்பார்ந்த பொதுமக்களே உங்களுக்குச் சொல்வதற்காக அருமையான நல்ல செய்தி ஒன்றை வைத்திருக்கிறேன் எனக்குப் பரிசு தருவதற்காக உடனே பணம் வசூலியுங்கள்” என்று கூச்சல் போட்டார்.

முல்லா ஒரு செய்தியினைச் சொல்லுகிறார் என்றால் உண்மையிலேயே அது நல்ல செய்தியாகத் தான் இருக்கும் என்ற நம்பிய மக்கள் அவசரமாக பணம் வசூலித்து ஒரு கணிசமான தொகையை முல்லாவிடம் கொடுத்தனர்.

அந்த அன்பளிப்புத் தொகையை வாங்கி எண்ணி சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்ட முல்லா மக்களை நோக்கி அன்பார்ந்த பொதுமக்களே நான் கூற இருக்கும் நல்ல செய்தி இதுதான் இந்த முல்லா ஒரு மகனுக்குத் தந்தையாகிருக்கிறார் என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்…