இட ஒதுக்கீடு


‘நீரே தாகம் தணிக்கும்’ என்கிறான் ஒருவன். ‘இல்லை, பானியே தணிக்கும்’ என்கிறான் மற்றொருவன். ‘இல்லை, வாட்டரே தணிக்கும்’ என்கிறான் இன்னொருவன்.

மூவரும் அடித்துக்கொண்டு சாகிறார்கள், தாகம் தணியாமலே. இதுதான் மதவாதிகளின் கதை.

பொருள் ஒன்றுதான்; பெயர்தான் வேறு வேறு என்பதைப் புரிந்துகொள்ளாத அறியாமையே சண்டைக்குக் காரணம்.

இறைவனை அறியாதவனே இறைவன் பெயரால் சண்டையிடுகிறான். சண்டையிடுகிறவன் உண்மையான மதவாதியல்லன். அவன் வெறும் மதம் பிடித்தவன்.

வலையில் தண்ணீர் அகப்படாது. மதம் பிடித்தவனிடம் மகேசன் அகப்படமாட்டான்.

பறக்கும் போது சப்தமிடும் வண்டு பூவில் அமர்ந்து தேன் அருந்தும் போது மெளனமாகி விடுகிறது.

இறைவனை அடையாதவனே சர்ச்சைகள் செய்கிறான். அடைந்தவன் மெளனமாகி விடுகிறான்.

எல்லாப் பூவிலும் தேன் இருக்கிறது என்பதை அறிந்த தேனீ மலர்களுக்குள் பேதம் பாராட்டுவதில்லை. ஞானியும் மத பேதம் பாராட்டுவதில்லை.

ஒருவன் மந்திரை இடித்துவிட்டு மஸ்ஜித் கட்டுகிறான். மற்றொருவன் மஸ்ஜிதை இடித்து மந்திர் கட்டுகிறான்.

இவர்கள் கட்டடங்களையே வணங்குகிறார்கள். கடவுளை அல்ல.

இதயமே இறைவனின் மெய்யான ஆலயம்.

போலி மதவாதிகள் மெய்யாலயத்தை இடித்துவிட்டுப் பொய்யாலயத்தைக் கட்டுகிறார்கள்.

கடவுள் பக்தன் கடப்பாரை ஏந்தமாட்டான். பூக்களைத் தொடுக்கும் நாரையே ஏந்துவான்.

இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்பதை அறிந்தவன் அவனுக்கு இட ஒதுக்கீடு செய்வான?

எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதைப் பார்க்கத் தெரிந்தவன் பிற உயிர்களைப் பகைப்பானா?

கவிஞர் பர்ஃக் எப்பொழுதோ எழுதிய கவிதை இது:

நீ மறைந்திருப்பதால்தான்
    மஸ்ஜித் மந்திர் சண்டைகள்
நீ மட்டும் வெளிப்பட்டுவிட்டால்
    எல்லாமே நீயென்றாகிவிடும்

– அப்துல் ரகுமான்

Advertisements