இராவணக் கோடுகள்


23.01.1985

என் மனக் குகையின் இருளில் பிரியமாய் பிரகாசிக்கும் அந்த இரண்டு ஓவியங்கள். உணர்ச்சித் தூரிகை மங்காத வர்ணங்களால் வரைந்த ஓவியங்கள்.

இறந்த காலம் தன் மாளிகைக்கு என்னை அடிக்கடி அழைத்துக்கொள்ளப் பயன்படுத்தும் வசியங்கள்.

வெறும் ஓவியங்களா அவை? என் நிகழ் காலத்திலும் எட்டிப்பார்க்கும் இறந்தகாலங்கள். என்றைக்கோ பட்ட காயங்கள். இன்னும் சுகமாக வலிக்கும் காயங்கள். புன்னகையால் அழும் காயங்கள்!

அந்த ஓவியங்கள் நிலையாகத்தான் நிற்கின்றன. ஆனால் அவற்றின் ஒவ்வோர் அணுவிலும் உயிரின் பிரளயத் துடிப்பு! பேச்சின்றி உறைத்த உதடுகள். ஆனால் அர்த்தங்களை உரத்து ஒலிக்கும் மெளனம்.

முதல் ஓவியம் – அவள் நடந்து வருகிறாள். காலடியில் கிடக்கும் இதயங்களை அலட்சியமாக மிதித்துச் செல்லும் ராஜநடை. ஏன் இருக்காது? செளந்தர்ய சாம்ராஜ்யத்தின் மகுடம்! பெளர்ணமியும் பூக்களும் கப்பம் கட்டும் கன்னிமையின் கர்வம்.

இடையில் ஒயிலாக ஏந்திய குடம். பரவசத்தில் தளும்பிச் சிந்துகிறது. இருக்காத? யாருக்குக் கிடைக்கும் அந்தச் சிருங்கார சிம்மாசனம்? யாருக்கு வாய்க்கும் அந்த அனுகராக ஆலிங்கனம்?

என் பார்வை அவளை நோக்கிச் செல்கிறது- ஒளிந்து மறைந்து நீரை நாடி நீளும் வேர்களாக. அதன் தாகம் அவளுக்கு தெரியாத? தெரியும். தாகத்தை அறியாத தண்ணீரா!

ஆனால் தாகத்திற்கும், சம்மதிக்கும் தண்ணீருக்கும் இடையில் பாறைகள்; இரக்கமற்ற பாறைகள்! இப்படி ஒரு காலம்.

ஆண்டுகள் மலர்ந்து மலர்ந்து உதிர்கின்றன. மற்றொரு காலம். மற்றொரு நேரம். மற்றொரு சூழ்நிலை. மற்றொரு காட்சி. ஆனால், அதே பாத்திரங்கள்.

 இரண்டாவது ஓவியம் – அவள் நடந்து வருகிறாள். அவளேதான். ஆனால் அவளா இவள்? மகுடம் இல்லை. சிம்மாசனம் இல்லை. அவளுடைய கன்னிமைப் பூக்களோடு அவள்கூந்தல் பூவையும் பறித்து விட்டிருந்தது காலம்.

இடையில் ஒரு குழந்தை. வாழ்க்கையிடம் பட்ட கடன் சுமை! குழந்தை அழுகிறது அவளுக்கும் சேர்த்து. பறிகொடுத்ததை அறிந்த அவளுடைய வேதனைக்கு, அதை அறியாத குழந்தையின் அழுகை வடிகால்.

தயக்கத்தோடு நிமிர்கிறது தலை. அவள் பார்வை என்னை நோக்குகிறது-பரிதாபமாக ஏந்திய பிச்சைப் பாத்திரமாக!

என் இதயம் அழுகிறது. எல்லா வசந்தங்களிலும் மலர்ந்த பூக்களை, நட்சத்திரங்களை, என்னை, எல்லாவற்றையும் அந்தப் பாத்திரத்தில் போட்டு விட இதயம் துடிக்கிறது.

ஆனால் பாத்திரத்திற்கும் எனக்கும் இடையே சுவர்கள்; தாண்ட முடியாத சுவர்கள்! இப்படி ஒரு காலம்.

ஒவ்வொருவரைச் சுற்றியும் அதட்டும் கோடுகள். இலக்குமணக் கோடுகள் அல்ல; இராவணக் கோடுகள்! உடல்கள் கோடுகளுக்குள் ஒடுங்காலாம். உள்ளங்கள்?

 இரண்டு அனுபவங்களும் சிந்தனையில் கொஞ்சம் கொஞ்சமாக வடிவம் எடுக்கின்றன. வெளியேவர நச்சரிக்கின்றன. காலம் கனிகிறது. என் தூரிகை தினவெடுத்துப் பரபரக்கிறது. வார்த்தைகள் வர்ணங்களாகக் குழைந்து கெஞ்சுகின்றன. பிரமாவேசத்தோடு வரைகிறேன்.

புதிய பூம்பின் கர்வமாக
மணம் திரியும் பாதையில்
நீர் தளும்பிச் சிந்தும்
குடமேந்தி
நீ நடந்து வந்தபோது
என் பார்வைகள்
உன்னை நோக்கி நீண்ட
வேர்கள்
அது அன்று
முறையிடும் குரலாகச்
சருகுகள் புலம்பும் பாதையில்
 சத்தம் தளும்பிச் சிந்தும்
குழந்தையை ஏந்தி
 நீ நடந்து வருகிறபோது
உன் பார்வைகள்
என்னை நோக்கி
ஏந்திய பிச்சைப் பாத்திரங்கள்
இது இன்று
இருவரும்
சடங்குகளின் கைதிகள்

இரண்டு நிகழ்ச்சிகளிலும் அவள் நடந்துவந்தபாதையை அவளுக்கு பொருத்தமான பின்னணியாக- குறியீடாக அமைத்தேன்.

 இரண்டு ஓவியங்களையும் எதிரும் புதிருமாக அமைத்தேன். ஒன்று மற்றொன்றின் பிம்பம். பிரதி பிம்பம் அல்ல; முரண் பிம்பம்.

ஒன்று மற்றொன்றோடு ஒப்பிட்டுக்கொண்டு தங்களுக்குள் மின்சாச இணைப்பை ஏற்படுத்திக் கொண்டு ஜ்வலிக்கும் ஓவியங்கள்.

என் மனக் குகையின் இருளில் பிரியமாய்ப் பிரகாசிக்கும் ஓவியங்கள்.

நாட்களின் தூசி படிந்தால் என் கண்ணீரால் கழுவிப் புதுப்பிக்கும் ஓவியங்கள்.

– அப்துல் ரகுமான்.

Advertisements