சிந்து நதி


26.02.1986.

என் உணர்வுகள் பருவம் அடைந்த நாளிலிருந்து கண் நதி மூலத்தைக் காண்பதில் தீராத ஆசை.

அந்த நதி எங்கிருந்து உற்பத்தியாகிறது? ஏன் உற்பத்தியாகிறது? என்ற கேள்விகள் அடிக்கடி என்னைக் குடைந்து கொண்டேயிருக்கும்.

கண்ணீரைப் பார்க்கும் போதெல்லாம் நான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறேன்.

கண்களிலேயே அழகான கண்கள் நீர் ததும்பி நிற்கும் கண்கள்.

கண்ணுக்கு அலங்காரம் மையல்ல; கண்ணீர்.

கண்ணுக்கு மட்டும் மனிதன் நகையணிவதில்லை என்பது தவறு. கண்ணீர் தான் கண்ணின் ஆபரணம். கண்ணே தயாரித்துக் கொள்ளும் ஆபரணம்.

கண்ணுக்குப் பேச மட்டுமல்ல எழுதவும் தெரியும். கண்ணீர் தான் மை.

கன்ன ஏட்டின் ஈரவரிகள் உணர்ச்சிகள் தம்மைத் தாமே எழுதிக்கொள்ளும் ஆசு கவிகள்.

கண்ணீரும் புன்னகையும் முரண்களல்ல; அந்தரங்க உறவுக்காரர்கள்.

புன்னகை பூக்கள் சில நேரங்களில் கண்ணீர் மழையில் மலர்கின்றன. புன்னகைப் பூக்களின் தேன் சில நேரங்களில் கண்கள் வழியாகத் துளிர்க்கிறது.

புன்னகையாக மலரும் கண்ணீரையும், கண்ணீராகச் சிந்தும் புன்னகையும் நான் பார்த்திருக்கிறேன்.

புன்னகையிலும் கண்ணீரிலும் தான் மனிதன் தட்டுப்படுகிறான் ஆனால் புன்னகை அவன் முகாம், கண்ணீர் அவன் வீடு.

மனிதனிடத்திலிருத்தே உதித்து அவனை வளர்க்கும் ஜீவநதி கண்ணீர். அவன் பாவங்களைக் கழுவும் சொந்த கங்கை.

இந்த ஜீவநதியின் மூலத்தை நான் தேடியபோது அதன் மூலம் ஒன்றல்ல என்பதை அறிந்தேன்.

கண்ணீருக்குத்தான் எத்தனை வடிவங்கள்? எத்தனை நிறங்கள்? எத்தனை மணங்கள்?

கண்ணீரைச் சந்திக்கும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் அதன் புதுக்கோலம் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தும். எத்தனை வகையான தரிசனங்கள்!

ஒருமுறை பார்க்கிறேன் – மூடிய இமை மூடிய கடிதமாகத் தெரிகிறது. கடிதத்தின் வாசகமே முகவரியாக் கசிகிறது!

மற்றொரு முறை பார்க்கிறேன் – கண்ணீர் சவ ஊர்வலமாகத் தெரிகிறது. இறந்துபோன கனவின் ஊர்வலம்! மயானம் நோக்கிப் போகும் மெளன ஊர்வலம்.

மற்றொரு முறை பார்க்கிறேன் – உதிரும் ஒவ்வொரு துளியும் நட்சத்திரமாகத் தோன்றுகிறது. சொந்தநாட்டை விட்டு அகதிகளாய் வெளியேரும் நட்சத்திரங்கள்!

மற்றொரு முறை பார்க்கிறேன் – விழிகள் மார்பகங்களாகத் தெரிகின்றன. பால் குடிக்கும் சிசுக்கள் இல்லாத அனாதை மார்பகங்கள். பாவம் சிசுக்களின் ஏக்கக் கற்பனையில் துளிர்க்கின்றன!

மற்றொரு முறை பார்க்கிறேன் – கண்ணீர் பாற்கடலின் பிறப்பாகத் தோன்றுகிறது. அது அமுதமா? ஆலகாலமா? அமுத நஞ்சு அது! அலைக்கழிக்கப்பட்ட பாற்கடல் தன் வேதனையில் அமுதத்தை நஞ்சாக உமிழ்கிறது!

மற்றொரு முறை பார்க்கிறேன் – மனிதனின் பாசம், அன்பு, காதல் என்ற ஆகர்ஷணங்கள், தம்மையே பரிமாறும் பசியில் தவிக்கும் ஆகர்ஷணங்கள் மொழிபெயர்க்கப்படுகின்றன. எந்தப் பார்வையும் புரிந்து கொள்ளும் திரவ மொழியில்!

மற்றொரு முறை பார்க்கிறேன் – கண்ணீர் மனிதனின் ஞானஸ்நான நீராகப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் நான் கண்ட தரிசனங்களைப் பதிவு செயிதுகொண்டே வந்தேன். ஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இவற்றைக் கவிதையாக்கினேன்.

மூடிய கடிதத்தின் வாசகங்கள்

முகவரியாகக் கசிகின்றன

மயானம் நோக்கிக் கனவுச்சவ

மெளன ஊர்வலம் போகிறது

நாட்டைப் பிரிந்த அகதிகளாய்

நட்சத்தரங்கள் நடக்கின்றன

அணைக்கும் சிசுக்களின் கற்பனையில்

அனாதை முலைகள் துளிர்க்கின்றன

அலைக்கழிக்கப்பட்ட பாற்கடல்கள்

அமிர்தத்தை நஞ்சாய் உமிழ்கின்றன

பரிமாறப் பசிக்கின்ற ஆகர்ஷணம்

பார்வைக்கு மொழிபெயர்ப் பாகின்றது

ஞாபக வெளிச்சத்தின் சந்நிதியில்

சுயஞானக் குளியல் நடக்கின்றது.

– அப்துல் ரகுமான்

Advertisements