மரணம் முற்றுப்புள்ளி அல்ல


31.10.1984.

மரணத்திற்குப் பிறகு என்ன ஆவோம்? ஏதாவதொரு கணத்தில் ஒவ்வொருவரையும் குடைகிற கேள்வி.

இந்தப் பயங்கரமான கேள்வியைச் சந்திக்க விரும்பாமல் எத்தனை முறை தவிர்த்திருக்கிறோம். எண்ணப் பாதையில் சில நேரம், இது எதிர்ப்பட்டுவிட்டால், அப்பொழுது தோன்றி விரியும் மர்ம்மான அகண்டாகார அந்தகாரத்தில் அகப்பட்டுச் சிந்தனையின் மூச்சுத் திணற எத்தனை முறை மிரண்டிருக்கிறோம்.

வழிப்பறிக் கொள்ளைக்காரனைப்போல் ஒரு நாள் என்னை இக்கேள்வி வழிமறித்துக் கொண்டது. தப்பிக்க முடியாதபடி அகப்பட்டுக் கொண்டேன்.

எதைத் தருவது? என்னிடமும் சில விடைகள் கைவசம் இருந்தன. வெறும் சில்லறைகள்; பழைய நாணயங்கள். இந்தக் கேள்வியிடம் இவை செலவாணி ஆகும் என்று தோன்றவில்லை.

திருப்தியாக ஏதாவது தராவிட்டால் இந்த ஈவிரக்கமில்லாத வேள்வி என்னை விழுங்கிவிடும் என்று தோன்றியது.

இந்த மாதிரி குழப்பமான நேரங்களில் நான் அடைக்கலம் தேடுவது சர்ரியலிசத்திடம்தான்.

சர்ரியலிசம் – மனத்தை நம் நட்டுவாங்கத்திற்கு ஆடச் சொல்லி பலவந்தப்படுத்தாமல், அதன் போக்கில் ஆடச் சொல்லி அவிழ்த்து விடும் சுதந்திரம்; அடி மனதில் உறங்கிக் கிடக்கும் அதிசயங்களைத் தட்டி எழுப்பும் பள்ளி எழுச்சி.

ஒவ்வொருவருக்கும் ஒரு பாற்கடல் இருக்கிறது; மானம்! அதன் அடியாழத்தில் கிடக்கும் ஐசுவரியங்கள் நாமே அறியாதவை. கடைவதற்கு மந்திரமும் வாசுகியும் கிடைத்துவிட்டால் ஒவ்வொன்றாக வெளியே கொண்டு வந்து விடலாம்.

இந்த கேள்விக்கும் மனத்திடம் ஏதாவது விடை இருக்கும். அதை வெளியே கொண்டு வர வேண்டும்.

என் சிந்தனையின் செயற்கைச் சுடர்களை அணைத்து இருட்டாக்கிக் கொண்டேன். தத்துவங்களின் வாயை அடக்கி அமைதியாக்கிக் கொண்டேன். சுத்த சூனியம்; அமைதி.

கேள்வியை மட்டும் ஒருமுகப்புள்ளியாக்கி ஆழ்ந்த தியானத்தில் மூழ்கினேன். மனம் காட்டும் காச்சிகளுக்குக் காத்திருந்தேன்.

சிறிது நேரம் கழித்து ஒரு படிமம் தோன்றியது; கண்ணீர்த் துளி சொட்டும் இமை.

இன்னும் சிறிது நேரம் கழித்து மற்றொரு படிமம் தோன்றியது; ஒரு மணியிலிருந்து கயிறு அறுந்து விழுகிறது. மணியின் நாவிலிருந்து நட்சத்திரங்கள் உதிர்கின்றன.

சிறிது நேரம் கழிந்தது; மற்றொரு படிமம் உதித்தது; மிகப் பெரிய பாதம், ரேகைகளோடு. பிறகு என் தியானம் கலைந்துவிட்டது.

மனம் தந்த படிமங்களுக்குப் பொருள் காண முனைந்தேன்.

மனம் அறிந்த ஒரே மொழி படிமம்ந்தான். ஒவ்வொரு அனுபவத்தையும் மனம் காட்சிப் படிமமாக்கியே பதிவு செய்து கொள்கிறது. கருத்தோ, உணர்வோ ஙண்பொருளாக மனத்தில் படிவதில்லை. மனம் பேசும்போதும் படிம மொழியிலேயே பேசுகிறது.

மனத்தின் படிமங்களுக்கு நம் அனுபவங்கள் மட்டுமே காரணமில்லை. நம் மூதாதையாரின் அனுபவங்களும் பாரம்பரியச்சொத்தாகப் படிம வடிவில் நம் மனத்திற்கு வந்து சேர்வதுண்டு. உளவியல் மேதை யுங் இத்தகைய படிமங்களை மூலமுதற் படிமங்கள் என்னும் முன்மாதிரிப் படிமங்கள் என்றும் அழைக்கிறார்.

இந்த பின்னணியில்தான் மனப் படிமங்களுக்குப் பொருள் காண வேண்டும்.

என் மனம் காட்டிய முதல் படிமம் கண்ணீர்த் துளி சொட்டும் இமை. எளிதாகப் பொருள் விளங்கியது, கண்ணீர் வடிக்கும் சோகநிகழ்ச்சி. எனவே மனத்தின் அகராதியில் மரணத்தைக் குறிக்கும் வார்த்தையாக நீர்த்துளி இமை பதிவானத்தில் அதிசயமில்லை.

ஆனால் இத்தகைய மனப் படிமங்களுக்கு மேலோட்டமான பொருள் மட்டுமே இருப்பதில்லை. இவை பன்முகப் பொருள் ஆற்றல் உடையவை; குறிப்பாக இயங்குபவை.

எனவே மீண்டும் துப்பறிந்தேன். கண்ணீர் துளி தான் வசித்து கொண்டிருந்த இமையை விட்டுப் பறப்படுகிறது; வெளியேறுகிறது.

இப்போது புரிகிறது. மரண நிகழ்ச்சியால் ஆன்மா தான் வசித்துக் கொண்டிருந்த உடலை விட்டுப் புறப்படுகிறது; வெளியேறுகிறது.

அடுத்த படிமம்-கயிறறுத்துவிட்டு நட்சத்திரங்களை உதிர்க்கும் மணி.

மரணத்தோடு மணிக்குள்ள தொடர்பு புரிகிறது. சாவு மணி என்கிறோம். கிறித்தவர்கள் மரணத்தை அறிவிக்க தேவாலயத்தில் மணி அடிப்பார்கள்-இவையெல்லாம் மணிப் படிமத்திற்குக் காரணம்.

கயிறு அறுந்து விழுந்ததே! என்ன அர்த்தம். புரிகிறது மணியை அசைத்துக் கொண்டிருந்த-ஓலித்துக் கொண்டிருந்த கயிறு அறுந்துவிட்டது. உடலை இயக்கிக் கொண்டிருந்த மூச்சு அறுந்துவிட்டது. மணி ஓசை அடங்கிவிட்டது. உடலும் சப்தமடங்கிவிட்டது; வெற்று ஆரவாரம் நின்றுவிட்டது.

நட்சத்திரங்! ஓ! அவை ஒளியின் குறியீடுகள்; உள்ள தத்தின் சின்னங்கள். இந்தப் பெளதீக உடல் வாழ்க்கை வெறும் ஓசை வாழ்க்கை. ஆனால் கதை இதோடு முடியவில்லை. தொடர்கிறது. உன்னதமான ஒளியாக! அமரத்வமுடைய மெளனமாக!

அடுத்த படிமம்-ரேகைகள் பளிச்சிடும் பெரிய பாதம். இந்த படிமம் கொஞ்சம் சிரமப்படுத்தியது. நெடு நேரச் சிந்தனைக்குப் பிறகு தான் இந்தப் படிமம் வாசல் திறந்து வழிவிட்டது.

பாதம் எதைக் குறிக்கும்? நடை; பயணம். பெரிய!… ஆம் பெரிய பயணம். மரணம் முடிவிடம் அல்ல; மற்றொரு பெரிய பயணத்திற்கான திருப்பம்.

ரேகை? நம்முடைய ஆயுட்பாதை. மரணத்திற்குப் பிறகுள்ள நெடும் பயணத்தை நோக்க நம் ஆயுள், பாதத்தின் ரேகைக்குச் சமம்.

மரணம் முற்றுப்புள்ளி அல்ல; ‘கமா’ தான்.

மனப் படிமங்கள் தந்த விடை பிரமிப்பைத் தந்தது. இந்த அனுபவத்தைக் கவிதை ஆக்கினேன்.

மரண இமைகளிலிருந்து
நான் துளிர்த்து வழிவேன்
மூச்சுக் கயிறறுந்த
மணியின் நாவிலிருந்து
நட்சத்திரங்கள்
மெளனமாக உதிரும்

ஆயுட் பாதை
முழுவதும்
என் பாதத்தில்
ரேகையாக்கிவிடும்

இத்தோடு நான் கவிதையை முடிக்கவில்லை. இந்தப் படிம விடைகளின் சாரத்தை, ஒட்டு மொத்தமான குறிப்பைக் கவிதையின் முத்தாய்ப்பாய் எழுதினேன்.

வேஷத்தில் வசித்த
அர்த்தம்
திரையின் உட்புறம்
தன் உடலைத் தேடுப்
பறப்படும்.

அர்த்தம் ஒவ்வொரு மொழியும் தரும் ஏதாவது ஒரு சப்தத்தை-சொல்லைத் தனக்குரியதாக ஏற்றுக் கொள்வதைப்போல், ஆன்மா வாழ்க்கை நாடகத்தில் தனக்கு அளிக்கப்பட்ட பாத்திரத்திற்கு ஏற்ற வேஷத்தைத் தரித்து ஆடுகிறது நாடகம் முடிந்ததும் நடிகர்கள் வேஷத்தைக் கலைத்துவிட்டுத் தங்கள் சுய வடிவத்திற்கு வருவதைப்போல் ஆன்மாவும் நாடகம் முடிந்ததும் திரையின் உட்புறம் தன் சுய வடிவத்தைத் தேடிப் புறப்பட்டு விடுகிறது.

மரணம் என்னை முடித்து விடாது என்ற ஞானம் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தந்தது. இந்தக் கவிதைக்கு ‘எனக்கு அந்திகள் இல்லை’ என்ற தலைப்பைச் சூட்டினேன்.

– அப்துல் ரகுமான்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s