நாத்திக்க கோயில் (மலட்டுத்தாய்)


24.07.1985

என் உறவினர் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்குத் தலைப் பிரசவம். அச்ச ஆவலோடு காத்திருக்கிறோம். அந்தப்பயங்கரமான விபத்து அறிவிக்கப்படுகிறது.

”குழந்தை இறந்து பிறந்திருக்கிறது”.

நான் இடிந்து போகிறேன். இதயத்தில் வினாப் புயல்கள்; வேதனை அலைகள்.

பிறப்பு, பிறகு இறப்பு – இதுதானே நியதி? இதென்ன விபரீதம்! இயற்கைக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா?

பிறப்பில்லாமல் இறப்பா? முதலில் இறப்பென்றால் என்ன அர்த்தம்?

பிறப்பென்றால் உயிர்ப் படைப்பு அல்லவா? உயிரற்றதைப் பிறப்பு என்று எப்படிச் சொல்வது?

மொழியே! வெறும் சத்தப் பகட்டே! வாயால் ஆகாதவளே! எப்படிச் சொல்வாய் இதை?

முதலில் முடிவு; பிறகு தொடக்கம்! – சரித்திரமே! இந்தக் கவிதயை எப்படி எழுதுவாய்?

முதலில் செலவு; பிறகு வரவு! – ஜனன மரணங்களைப் பதிவு செய்யும் அதிகாரிகளே! இந்த கணக்கை எப்படி எழுதப்போகிறீர்கள்?

எப்படிச் சொல்வது இதை? அணைக்கப்பட்டு ஏற்றப்பட்ட தீபமா இது? அணைக்கப்பட்டதென்றால் எது அணைக்கப்பட்டது? ஏற்றப்பட்டதென்றால் எது ஏற்றப்பட்டது?

குழப்பம்; மயக்கம்.

வயிற்றில் குழந்தை கனக்க, நெஞ்சத்தில் கற்பனைகள் கனக்க பத்து மாதச் சுமை தாங்கி ஆகி-

தன்னைக் கிழித்துக்கொண்டு பிறப்பது இன்பம் என்பதற்காக அதன் வருகைத் துன்பத்தை ஏற்றுக்கொண்டு பொறுத்துக் கொண்ட அந்தப் பெண்-

இவ்வளவு வேதனைகளுக்கு ஈடாகத் தான் பெற்றெடுத்தது ஒரு பிணம் என்று அறிந்த போது எப்படி உடைந்து நொறுங்கிப் போயிருப்பாள்!

உலகமே! அவளை எப்படி அழைக்கப் போகிறாய்? அவள் தாயா? மலடியா?

புதிர்களின் நாயகனே! இதென்ன கோரமான புதிர்? என்ன அர்த்தம் இதற்கு?

அவளுடைய மனம்! எவ்வளவு கொடுரமான பூகம்பம் நடந்துவிட்டது அங்கே!

தனக்குள்ளிருந்தே ஒரு புதையலை எடுக்கப் போகும் ஓர் அதிசய ஆனந்த அனுபவத்திற்காக அவள் எவ்வளவு ஆவலோடு காத்திருந்திருப்பாள்!

அவள் பிரசவம்! பிரசவமா அது? ஓநாய்! சமாதியைத் தோண்டிச் சவத்தை இழுத்த ஓநாய்! என்ன கொடூரம் இது!

கருப்பையில் சவ அடக்கம்! அப்படியென்றால் ஒரு சமாதி பிரசவித்திருக்குமோ? என்ன விபரீதம் இது?

பருவத்தின் சீதனங்கள், தாய்மையின் வரங்கள்-இவ்வளவும் அவளுக்குத் தரப்பட்டது ஒருபிணத்தைப் பெறுவதற்கா?

ஓர் அர்த்தமற்ற சொல்லை-அசையை உச்சரிப்பதற்கா காலம் அவளை வாயாக்கியது? எவ்வளவு பைத்தியகாரத்தனம் இது?

இறைவா! உயிர் மெய் எழுத்துக்களை எழுதும் ஜீவ எழுத்தாளனே! அவள் கருப்பையில் மட்டும் உன் பேனா வெறும் மைத்துளியை உதறியதோ?

பிரபஞ்சத் தோட்டக்காரனே! உன்னைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை, பாடுபட்டுப் பண்படுத்திய ஒரு பருவப் பாத்தியில்-ஒரு பூவின் பூப்புப் புல்லரிப்புக்காக ஏங்கிக் கிடந்த பாத்தியில் எழும்பை அல்லவா நட்டுவிட்டாய்!

இந்தக் குரூரமான நடவையும் செய்துவிட்டு அவள் கண்களில் எதற்கு கண்ணீரையும் சுரக்க வைக்கிறாய்? இப்போது அவளுக்கு எதற்கு இந்த விழிப் பூவாளிகள்?

அவளுடைய கண்ணீர்! அது கண்ணீர் அல்ல; பால்! மார்பகம் பயனற்றுப் போய்விட்டதால் பாதை திரும்பி அனுப்பப்பட்ட பால்!

அவளுடைய கண்ணீர்! அது கண்ணீர் அல்ல; கொட்டுவதற்கா அவள் ஆசை ஆசையாகச் சேகரித்து வைத்த செல்லக் கொஞ்சல்கள்; தாலாட்டுக்கள்! வீணாகி விட்ட வேதனையில் அவைகள் உருகி வழிகின்றன-விழிகளின் வழியாக!

என்னைப் பெண்ணாக்கித் துடிக்கச் செய்த அனுபவம் இது. இந்த வேதனையை நான் கவிதையாகப் பிரசவித்தேன்.

எனக்குள்ளிருந்து
புதையல் எடுக்கக்
காத்திருந்தேன்
ஓ… என் பிரசவம்
சமாதியைத் தோண்டிய
ஓநாய்

ஒரு சமாதி பிரசவித்ததாலா
இது ஏன்
கருப்பையில் அடக்கமானது?

இந்த அசையை
உச்சரிக்கவா
காலம் என்னை
வாயாக்கியது?

ஜீவ எழுத்தாளனே!
உன் பேனா என்னில்
மைத்துளி உதரியதோ?
என் ஏக்கப் பாத்தியில்
எழும்பை நட்டவனே!
எதற்காக இந்த
விழிப்பூவாளிகள்?

கண்ணீர்… இந்த கண்ணீர்
பாதை திருப்பி
அனுப்பப்பட்ட பால்
உருகி வழியும் என்
செல்லக் கொஞ்சல்கள்…
தாலாட்டுக்கள்

கவிதைக்கு என்ன தலைப்பை இடுவது? தாயைக் கோயில் என்பார்கள்; குழந்தையைத் தெய்வம் என்பார்கள்.

இங்கோ ஒரு கோயில் உருவாயிற்று. தெய்வம் செத்துப் போய்விட்டது. தெய்வம் இல்லாத கோயில்! எனவே ‘நாத்திக்க கோயில்’ என்று தலைப்பிட்டேன்.

– அப்துல் ரகுமான்.

Advertisements